கன்னியாகுமரி பத்திரகாளியம்மன் கோயிலில் புகுந்து உண்டியலை தூக்கி சென்ற மர்மநபர்கள்!

By : Kathir Webdesk
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மர்ம நபர்கள் கோயிலில் புகுந்து உண்டியலை தூக்கி சென்றனர். உண்டியலை தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இரணியலை அடுத்த நெட்டாங்கோடு பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த வாரம் முடிவடைந்தது. தினமும் அர்ச்சகர் காலை, மாலை வேளைகளில் கோயில் நடை திறந்து பூஜை செய்வார்.
பூஜையை முடித்து கோயில் கதவுகளை மூடி சென்ற அர்ச்சகர், காலை மீண்டும் கோயிலுக்கு வந்த போது கோயில் மூலவர் கருவறை முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உண்டியலில் சுமார் 20 ஆயிரம் வரை பணம், நகைகளும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அர்ச்சகர் திருட்டு சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் புகார் அளித்தார். நிர்வாகிகள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிகாலையில் கோயில் வளாகத்தில் புகுந்த மர்ம நபர் கோயில் உண்டியலை பெயர்த்தெடுத்து தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
Inputs From: News18
