உலகப் புகழ் பெற போகும் குலசேகரன் பட்டினம்- இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்!
குலசேகரன் பட்டினத்தில் நிறுவப்பட உள்ள ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தை உலக புகழ் பெறப்போகும் மாநிலமாக மாற்ற உள்ளது.
By : Karthiga
தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்துதான் இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ராக்கெட்களை ஏவி வருகிறது. இந்த ஏவு தளம் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினத்தில் தான் அமைந்திருக்க வேண்டும். பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதி கடற்கரை பகுதியாகவும் காற்றின் வேகம் அதிகம் 30 கிலோமீட்டர் என்று அளவில் குறைவாக வீசும் பகுதியாகவும் இருக்க வேண்டும். இதுமட்டும் இல்லாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும் புயல், மின்னல், கனமழையின் தாக்கம் இல்லாத பகுதியாகவும் இருப்பது மிக மிக அவசியம்.
நிலையான காலநிலை கொண்ட பகுதியாகவும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதியாகவும் இருத்தல் நன்று. இப்படி அனைத்து தகுதிகளையும் கொண்ட இடமாக நாகப்பட்டினம் இருந்ததால் 1969- ஆம் ஆண்டு விண்வெளி துறையில் தமிழக அரசோடு பேச்சு வார்த்தை நடத்த வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காததால் அந்த வாய்ப்பை ஆந்திர அரசாங்கம் தட்டிப்பறித்தது . ஏவுதளம் அமைப்பதற்கு தேவையான இடத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து உதவிகளையும் வழங்கியதால் அங்கு ஏவுதளம் அமைந்தது.
அங்கிருந்து இதுவரை 36 நாடுகளுக்கு சொந்தமான 345 செயற்கைக்கோள்களையும் இந்தியாவுக்கு சொந்தமான மற்றும் 39 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ மிகக் குறைந்த கட்டணத்திலேயே செயற்கை கோள்களை விண்ணில் ஏவி வருவதால் பல நாடுகளும் நாடி வருகின்றன. எனவே இரண்டாவது ஏவுதளம் அமைக்க வேண்டியது அவசர அவசியமாகிவிட்டது. இதற்கான இடத்தை தேர்வு செய்த போது நிலவியல் ரீதியாக ஸ்ரீஹரிகோட்டாவை விட சிறந்த இடமாக தமிழ்நாட்டில் உள்ள குலசேகரன் பட்டினம் கண்டறியப்பட்டது.
நிலநடு கோட்டுக்கு 13.72 டிகிரி தொலைவில் ஸ்ரீஹரிகோட்டா இருக்கிறது ஆனால் குலசேகரபட்டினம் 8.364 டிகிரி தொலைவில் இருக்கிறது. இதனால் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்போது எரிபொருள் மிச்சமாகும். புவி உந்திசையும் அதிகமாக இருக்கும். எரிபொருள் குறைவாக செலவிடப்படும். அதே நேரத்தில் ராக்கெட் சுமந்துசெல்லும் செயற்கைக்கோளின் எடையும் அதிகரிக்க முடியும். இரண்டு ஆண்டுகளில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணி முடிந்து வர்த்தக ரீதியில் அதிக இலாபத்தை தரும் சிறிய ராக்கெட்டுகள் ஏவப்படும். பல உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இந்த பகுதியை சுற்றிலும் தொடங்கப்பட சாத்தியகூறு இருப்பதால் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த பகுதி பெரிய வளர்ச்சியை காணப்போகிறது. மொத்தத்தில் குலசேகரன்பட்டினமும் தமிழ்நாடு உலக நாடுகளில் பார்வையில் பெரும் பெயரை சம்பாதிக்க போகிறது.
SOURCE :DAILY THANTHI