ராஜராஜன் காலத்து ஆனைமங்கலச் செப்பேடுகளை நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி?
ராஜராஜன் காலத்து ஆனைமங்கலச் செப்பேடுகளை நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி?
By : Kathir Webdesk
நெதர்லாந்தின் லேடன் பல்கலைக் கழகத்தில் இருக்கும் சோழர் காலத்தில் புத்த விகாரத்திற்கு சாசனங்கள் எழுதிவைத்த லேடன் செப்பேடுகள் என்று தொல்லியல் வட்டத்தில் அறியப்படும் ஆனைமங்கலத்துச் செப்பேடுகளை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நெதர்லாந்து காலனி ஆதிக்கத்தின் போது பல்வேறு நாடுகளிலும் இருந்து எடுத்துவரப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கலைப் பொக்கிஷங்களை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அளிக்க முடிவு செய்துள்ள நிலையில் சோழர் கால வரலாற்றையும் வாழ்வியலையும் பற்றி விரிவாக விவரிக்கும் ஆலங்காட்டு செப்பேடுகளை மீட்டுவரும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருபத்தி ஒரு செப்புத்தகடுகள் அடங்கிய இந்த சாசனத்தில் சமஸ்கிருதத்தில் ஒன்று தமிழில் ஒன்று என இரு பிரிவுகள் உள்ளன ராஜேந்திர சோழனின் ராஜ முத்திரை பதித்த ஒரு வளையத்தில் இந்த 21 தகடுகளும் கோர்க்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகளில் சோழ வம்சத்தின் பரம்பரை, பொ.யு.மு 985 முதல் 1012 ஆண்டு வரையிலான முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. ஸ்ரீவிஜய மன்னரால் சூளாமணிவர்ம விகாரம் என்ற பெயரில் நாகப்பட்டினத்தில் கட்டமைக்கப்பட்ட புத்த விகாரம் ஒன்றிற்கு முதலாம் ராஜராஜ சோழன் ஆனை மங்கலத்தை ஒட்டியுள்ள 26 கிராமங்களை தானமாக அளித்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
1862ஆம் ஆண்டு இந்த செப்பு தகடுகள் பேராசிரியர் ஹென்ட்ரிக் அரன்ட் ஹமேக்கர் என்பவருக்கு வழங்கப்பட்டதாகவும், 1703-1712க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் இவை இந்தியாவில் இருந்து நெதர்லாந்துக்கு எடுத்து வரப்பட்டதாகவும் கருதப்படுகிறது. அண்மையில் இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து காலனி ஆதிக்கத்தின் போது எடுத்துவரப்பட்ட கலைப் பொக்கிஷங்களை அந்த நாடுகளுக்கு திருப்பி கொடுக்குமாறு நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இதற்கென்று அமைக்கப்பட்ட குழு உத்தரவிட்டது. இதனடிப்படையில் அருங்காட்சியகங்கள் காலனி ஆதிக்கத்தின் போது கொள்ளையடிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கலை பொக்கிஷங்களை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளன.
1700களில் ஆனைமங்கலத்துச் செப்பேடுகள் நெதர்லாந்துக்கு எவ்வாறு வந்து சேர்ந்தன என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை என்பதால் சட்டரீதியாக இவற்றை திருப்பி அளிக்க கோருவது பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. எனினும் நெதர்லாந்து அரசுக்கு காலனி ஆதிக்கத்தின் போது எடுத்துவரப்பட்ட கலைப் பொக்கிஷங்களை திருப்பி அளிக்குமாறு சிறப்பு குழு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்தியாவும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை தங்களிடம் அடிக்குமாறு நெதர்லாந்து அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று வரலாற்று மற்றும் கலைப்பொக்கிஷம் ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த செப்பேடுகளின் மூலம் ராஜராஜ சோழனின் தயையால் புத்த விகாரம் எவ்வாறு ஒரு கல்வி மற்றும் ஆன்மீக மையமாக விளங்கியது என்பது பற்றிய தகவல்கள் தெரிய வருவதோடு சோழர் கால வரலாற்றின் முக்கிய ஆதாரமாக இந்த செப்பேடுகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை ராஜராஜன் காலத்தில் சோழர்களின் படையெடுப்புகள், வெற்றிகள் குறித்தும் விவரிப்பதாக கூறப்படுகிறது. தமிழக தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் நெதர்லாந்தில் இருந்து இந்த செப்பேடுகளைக் கொண்டுவர தேவையான முயற்சிகள் செய்து வருவதாகவும் மத்திய கலாசார துறை அமைச்சகத்திடம் அதற்கான நடைமுறைகளை தொடங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.