Kathir News
Begin typing your search above and press return to search.

மண் காப்போம் இயக்கம் மகத்தான இயக்கம் - அர்ஜுன் சம்பத்

மண் காப்போம் இயக்கம் மகத்தான இயக்கம் - அர்ஜுன் சம்பத்

ThangaveluBy : Thangavelu

  |  26 Jun 2022 1:09 PM GMT

இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: 'மண் காப்போம்' என்பது ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியிருக்கும் உலகளாவிய இயக்கம் ஆகும். இந்த இயக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுப்புற பாதுகாப்பு ஆதரவு அமைப்புகள், உணவு பாதுகாப்பு அமைப்புகள், இயற்கை ஆர்வலர் குழு உள்ளிட்டவைகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

மண் காப்போம் இயக்கம், உலக முழுவதும் மக்களை மண் ஆரோக்கியத்திற்காக ஒன்றுகூடி குரல்கொடுக்க ஊக்கப்படுத்துகிறது. விவசாய மண்ணில் சூழலியல் கேடுகளால் குறைந்துவிட்ட கரிமச்சத்தை அதிகரிக்க தேசங்கள் அளவிலான கொள்கைகளை உருவாக்கவும் அவற்றை செயல்படுத்தவும் அனைத்து தேசத் தலைவர்களுக்கும் துணை நிற்கிறது. மண் வெகு வேகமாக மலடாகி வருவதால் மண்ணில் கரிமச்சத்தும் நீர்ப்பிடிப்பு சத்தும் குறைந்துவிட்ட காரணத்தினால் இன்னும் 20 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 40 சதவீதமாக குறையும் என்று நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடியாக உயர்ந்திருக்கும் நிலையில் வளமில்லாத மண், உணவில் ஊட்டச்சத்து இல்லாமல் செய்துவிடும். இன்று காய்கறிகளிலும் பழங்களிலும் முன்பு இருந்ததை விட 90 சதவீத குறைவான ஊட்டச்சத்தே உள்ளது. 200 கோடி மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறைபாடு காரணமாக பலவித நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வளமில்லாத மண்ணால் தண்ணீரை உறிஞ்சி நீர்நிலைகளில் நீரோட்டத்தை சீர்படுத்த முடியாது. மண், நீரைப் பிடித்து வைக்காவிட்டால், அதனால் தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, வெள்ளம் ஆகியவை ஏற்படக்கூடும். பூமியில் இயற்கையாக இருக்கும் கரிமப்பொருளால், அதன் எடையில் 90 சதவீதம் எடையுள்ள தண்ணீரைப் பிடித்துவைத்து, அதை மெல்ல, மெல்ல வடியவிட முடியும். அடிக்கடி வறட்சி ஏற்படும் பகுதிகளுக்கு இது பெரிதும் உதவும்.

ஆண்டுதோறும் சுமார் 27,000 உயிர் வகைகள் தங்கள் வாழ்விடம் அழிந்து வருவதால் அழிந்து கொண்டிருக்கின்ற என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்த பிரச்னை எந்த அளவு பெரியது என்றால், விவசாயிகளின் நண்பனான மண்புழு உள்ளிட்ட பூச்சிகள் 80 சதவீதம் அழிந்துவிட்டன. நுண்ணுயிர்கள், உள்ளிட்ட பல்லுயிர்கள் அழிவது, அவற்றின் வாழ்விடமான மண்ணை மேலும் பாதித்து, மண்ணின் மீளுருவாக்கத்தைத் தடுத்துவிடும். மண்ணில் சேமிக்கப்படும் கார்பன், உயிருள்ள தாவரங்களால் சேமிக்கப்படுவதைவிட மூன்று மடங்கு அதிகமானது. காற்று மண்டலத்தில் சேமிக்கப்படுவதை விட இரு மடங்கு அதிகமானது. அதாவது காற்றிலுள்ள கரிமத்தை தன்மயமாக்க மண்வளம் இன்றியமையாதது ஆகும்.

பூமியின் மண்ணுக்கு புத்துயிரூட்டவில்லை என்றால், அது 85,000 கோடி டன் கரியமில வாயுவை காற்று மண்டலத்திற்குள் வெளியேற்றும். இது கடந்த 30 ஆண்டுகளில் மனிதர்கள் வெளியேற்றியுள்ள அளவைவிட அதிகமானது ஆகும். மண்வளம் அழிவதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலகெங்கும் நிலவளம் அழிவதால் 74 சதவீதம் ஏழை மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். மண்வளம் அழிவதால், உலகில் 10.6 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான செலவு ஏற்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பும், உணவு பற்றாக்குறையும், தண்ணீர் பற்றாக்குறையும், 2050ம் ஆண்டிற்குள், 100 கோடிக்கும் அதிகமான மக்களை வேறு பகுதிகளுக்கு வேறு நாடுகளுக்கும் இடம்பெயரச்செய்யும். ஆப்பிரிக்காவில் 1990 முதல் 90 சதவீதத்திற்கும் அதிகமான பெரிய போர்களுக்கும், மோதல்களுக்கும் நிலப் பிரச்னைகளே முக்கியக் காரணமாக இருந்துள்ளன. பிரெஞ்சு புரட்சி முதல் அராப் ஸ்ப்ரிங் வரை பல போராட்டங்களுக்கு வழிவகுத்தது. மேலும், அதிகரித்து வரும் உணவு பதார்த்தங்களின் விலையும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

மண்ணில் குறைந்து வரும் கரிமச்சத்தை மீட்கவும், மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்கவும் குறைந்தது 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை கரிமச்சத்தை மீண்டும் மண்ணிற்கு கொண்டுவர வேண்டும். நிலத்தைத் தாவர நிழலின் கீழ் கொண்டுவந்து, இலைதழைகளின் கழிவுகள் மற்றும் விலகுகளின் கழிவுளைச் சேர்க்க வேண்டும். மண் ஆரோக்கியம் மேம்பட, மண்ணில் உயிர் சத்துக்கள் அதிகரிக்க ஒவ்வொரு தேசத்திலும், உறுதுணையான கொள்கைகளை அவசியம். அக்கொள்கைகளுக்கும் மக்களின் ஆதரவும் அவசியம். போராட்டங்கள் நடத்துவதாலோ, அரசியல் பிரச்னையாக மாற்றுவதன் மூலமோ இந்த மண் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. நாம் இப்போதே செயல்பட்டால்தான், மண் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் மூலம் இந்த நிலையை நாம் குறிப்பிடத்தக்க விதத்தில் மாற்றிட முடியும். இதற்கு தனிப்பட்ட மனிதர்கள் ஆங்காங்கே செயல்படுவது இனிமேல் போதாது. மண் ஆரோக்கியத்தை உறுதி செய்ய குடிமக்கள் அனைவரின் கூட்டு ஈடுபாடு தேவை.

உலகிலுள்ள ஒவ்வொரு தேசத்திலும் மண்ணைப் பாதுகாப்பதற்கு தேவையான கொள்கைகளை உருவாக்கினால்தான் இது நிகழமுடியும். மண் புத்துணர்வு பெற, மண்ணை புத்தாக்கம் செய்ய, மண்ணில் உயிர்ப்புத் தன்மையை அதிகரிக்க, மண்ணைப் பாதுகாக்க உலகளாவிய கொள்கை வரைவுகள் அவசியம். மண்ணைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் இயற்றப்படுவது அவசியமாகும்.

1970களில் நாம் தினசரி பயன்படுத்தும் ஸ்பிரே, ஃபிரிட்ஜ், ஏர் கண்டீஷனர் போன்ற சாதனங்களிலிருந்து உற்பத்தியாகும் ரசாயனங்களான குளோரோஃபுளூரோகார்பன் எனும் சிஎஃப்சி வாயுக்களால் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து எச்சரித்தனர். காற்று மண்டலத்தில் இயற்கையாக உள்ள ஓசோன் படலம், தோல் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய சூரியனின் அல்ட்ராவயலட் ஒளிக்கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. 1985ல் அன்டார்டிகாவிற்கு மேலே ஓசோன் படலத்தில் விரிந்து கொண்டே செல்லும் ஒரு ஓட்டை கண்டறியப்பட்டது. வருங்காலத்தில் தோல் புற்றுநோயும், அழியும் தாவரங்களும், சேதமடையும் சூழலியலுமாக உலகெங்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தது.

1987ல் தொடங்கி 197 நாடுகள் ஒன்றுகூடி, சி.எஃப்சி மற்றும் ஓசோனை பாதிக்கக்கூடிய இதர ரசாயனங்களின் உற்பத்தியை நிறுத்த மான்ட்ரியல் புரோட்டோகால் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இதனால் படிப்படியாக ஓசோனை பாதிக்கும் 99 சதவீதம் ரசாயனங்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒன்று ஓசோன் படலம் சீரடைந்து வருகிறது. இந்த நூற்றாண்டின் பாதி காலத்திற்குள் ஓசோன் ஓட்டை முழுவதுமாக மூடிவிடும் என்று தற்போது கணிக்கப்படுகிறது.

மண் காப்போம் இயக்கத்திற்காக சத்குரு தனியாக மோட்டார் சைக்கிளில் 25 நாடுகள் வழியாக, 30,000 கி.மீ. தூரத்திற்கு லண்டனில் தொடங்கி இந்தியா வரை 100 நாள் பயணம் மேற்கொண்டு கோவையில் வந்து நிறைவு செய்துள்ளார். இப்பயணத்தின்போது 74 நாடுகள் மண் காப்போம் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 607 முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. 320 கோடி மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மண் காப்போம் இயக்கம் உருவாகியுள்ளது.

இந்த இயக்கத்தின் மூலமாக உலக நாடுகள் மாநாட்டில் மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வேண்டும், மண்ணில் கரிமச்சத்தை பிடித்து வைத்து புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியங்கள் கிடைக்க வேண்டும்; கரிமச்சத்து நிறைந்த மண்ணில் விளைந்த இயற்கை விவசாய விளைபொருட்களுக்கு சந்தையில் சிறப்பு விலை கிடைக்க வேண்டும்; விவசாயிகளின் சராசரி வருமானத்தை உயர்த்திட வேண்டும். இத்தகைய கோரிக்கைகள் விவசாயிகளுக்காக உலக நாடுகளிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 'பசுமைக் கரங்கள்' காவிரியின் கூக்குரல் உள்ளிட்ட இயக்கங்கள் மூலம் இந்தியாவின் பல மாநிலங்களில் மாநில அரசுகளுடன் ஈஷா யோகா மையம் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வற்றிபோன 13 நதிகளை மீட்பதற்கு நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன. இந்த நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய முறை மாற்றப்பட்டு, லாபம் தரும் மர விவசாயத்திற்கு அவர்கள் மாறி இருக்கின்றார்கள். விவசாயிகளின் வருவாய் உயர்ந்திருக்கிறது. ஆறுகளின் இரு கரைகளிலும் 100 மீட்டர் தொலைவுக்கு மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் ஆற்றில் நீரோட்டம் தொடர்ந்து இருப்பதற்கான வழிவகைகள் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வடு போய் மறைந்து போன ஆறுகளையும் கூட மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்பொழுது இந்த மண் காப்போம் இயக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படத் தொடங்கி இருக்கின்றன. பாரத பிரதமர் நரேந்திர மோடி 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பல மாநிலங்களின் முதலமைச்சர்களும் 'மண் காப்போம்' திட்டத்தில் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். தமிழகத்திலும் 'மண் காப்போம்' இயக்கம் வலுப்பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையிலும் மண் பாதுகாப்பிற்காக உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பசுமைக் கரங்கள் திட்டத்தை ஆதரித்து மரங்கள் நடும் விழாவைத் தொடங்கி வைத்து ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தார். தற்போதைய நமது தமிழக முதலமைச்சரும் மண் காப்போம் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News