Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கால் உயரும் கள்ளச்சாராய மரணங்கள்! கொதிக்கும் பொதுமக்கள்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்தவர்களில் தற்போது வரையில் 7 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கால் உயரும் கள்ளச்சாராய மரணங்கள்! கொதிக்கும் பொதுமக்கள்!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 May 2023 4:39 AM GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்தவர்களில் தற்போது வரையில் 7 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எக்கியார் குப்பம் கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வந்துள்ளது. இதனை உள்ளூர் போலீசார் கண்டும் காணாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் அந்த கிராமத்தை சேர்ந்த 16 பேர் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். சில மணி நேரங்களில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் உள்ளிட்ட 3 பேரும் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை (மே 13) உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட எக்கியார் குப்பத்தை சேர்ந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திண்டிவனம், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி, மலர்விழி, மன்னாங்கட்டி உள்ளிட்ட 3 பேர் நேற்று (மே 14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருந்த நிலையில் இன்று (மே 15) காலை சிகிச்சையில் இருந்த விஜயன் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

போலீசாரின் அலட்சியமாக இருந்ததாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், சீனுவாசன் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா, சிவகுருநாதன் உள்ளிட்டோர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் கள்ளச்சாராயம் விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் பொதுமக்களின் உயிர்கள் மீது அலட்சியபோக்கே தி.மு.க. அரசு கடைப்பிடிப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இனிமேல் ஆவது அரசு விழித்துக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தி.மு.க. அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News