புத்தாண்டில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை.. முதலிடம் சென்னை.. கடைசி இடம் சேலம்.!
புத்தாண்டில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை.. முதலிடம் சென்னை.. கடைசி இடம் சேலம்.!

உலகம் முழுவதும் கோலாகலமாக தொடங்க வேண்டிய புத்தாண்டு, கொரோனா காரணமாக மிகவும் உற்சாகம் இன்றி பிறந்தது. அனைவருக்கும் சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம். அதே சமயத்தில் தமிழகத்தில் மது பிரியர்கள் புத்தாண்டை தங்களுக்கு உரிய பாணியில் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
அதாவது புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னரே தமிழகத்தில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சில தளர்வுகளை தவிர்த்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இதில் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இருப்பினும் டாஸ்மாக் பார்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் அதுவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டமாக மது பிரியர்கள் நேற்று ஒரே நாளில் மதுவை வாங்கி தீர்த்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.
அதில் சென்னை மண்டலம் ரூ.48.75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு முதல் இடத்தையும், கோவை மண்டலம் 28.40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு 2வது இடத்தையும், திருச்சி மண்டலத்தில் ரூ.28.10 கோடி, மூன்றாம் இடத்தையும், மதுரை மண்டலத்தில் ரூ.27.30 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.26.49 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.