தலைமையாசிரியர் பதவி உயர்வு.. இடைக்கால தடை விதித்த மதுரை உயர்நீதிமன்றம்.!
தலைமையாசிரியர் பதவி உயர்வு.. இடைக்கால தடை விதித்த மதுரை உயர்நீதிமன்றம்.!
By : Kathir Webdesk
மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களான யு.ஜேக்காப், எஸ்.கலைச்செல்வி, பி.ராஜேஷ், டி.டி.ஜெயகுமாரி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். அப்போது அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: “ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வந்த நாங்கள் பதவி உயர்வு மூலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். அந்த நேரத்தில் சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாத காரணத்தினால் வெவ்வேறு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டோம்.
தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 2020ம் ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு கொரோனா காரணமாக நடத்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிப்ரவரி 15ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அப்போது தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் எங்களை போன்றவர்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். எனவே தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின்னரே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தற்போது தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவது சரியாக அமையாது. எனவே தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். மீண்டும் பிப்ரவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.