Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை: தெப்பகுளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது ? - உயர்நீதிமன்றம் கேள்வி!

கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைப் பராமரிக்காத அதிகாரிகளின் நடவடிக்கையால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது.

மதுரை: தெப்பகுளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது ? - உயர்நீதிமன்றம் கேள்வி!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 Nov 2021 12:34 PM GMT

கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைப் பராமரிக்காத அதிகாரிகளின் நடவடிக்கையால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது.

மதுரை சின்னஅனுப்பானடியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் சாலையில் அமைந்துளது. அதன் தோற்றத்தை மறைக்கின்ற வகையில் 4 புறங்களிலும் வணிகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடங்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெப்பக்குளத்தில் கலக்கிறது. அது மட்டுமின்றி குப்பைகளும் தெப்பக்குளத்தில் கொட்டப்படுவதால் அதன் இயற்கையான நீர்வழித்தடம் மிகவும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன் பின்னர் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டது. அங்கு இருந்த ஒரு சில கடைகளும் அகற்றப்பட்டது. அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் தோற்றத்தை மறைக்கின்ற வகையில் கட்டுமானங்களை அகற்றவும், தெப்பக்குளத்தை முறையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கூறும்போது, தெப்பக்குளத்தை சுற்றி 195 கடைகளில் 99 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இது பற்றி சில கடைக்காரர்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் சீராய்வு மனு ஒன்றை அளித்துள்ளனர். அதன் மீதான விசாரணை நிலுவையில் இருக்கிறது என கூறப்பட்டது.

இதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள் அதிகாரிகளின் மீது மிகவும் அதிருப்தி தெரிவித்தனர். தெப்பக்குளத்தைச் சரியாக பராமரிக்காத அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது. சரியாக பணி செய்யாத அதிகாரியை பணியிட மாற்றம் செய்யலாமே என்றனர். மேலும் நீதிமன்றத்தை குறைத்து மதிப்பிட வேண்டும் எனவும் காட்டமான பதிலை தெரிவித்தனர்.

மேலும், தெப்பக்குளத்தை கோயில் நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை என்பது மனுதாரர் தாக்கல் செய்திருக்கும் புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது. எனவே தற்போதைய புகைப்படத்தை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மனுதாரர் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், முறையாக தெப்பக்குளத்தை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source: Dinamani

Image Courtesy: Facebook


Next Story
கதிர் தொகுப்பு
Trending News