நிலத்தை மீட்க வலியுறுத்தி நெல்லை ஆட்சியர் அலுவலத்தில் விஷம் குடித்த தொழிலாளி!
By : Thangavelu
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்ததால் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது ஒரு தொழிலாளி திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் பிரச்சினை தொடர்பான மனுக்களை ஆட்சியரிடம் வழங்கி வருவது வழக்கம். அதே போன்று இன்று (மே 30) திங்கட்கிழமை என்பதால் கூட்டம் நடைபெற்றது. மனு அளிக்க வந்தவர்களை போலீசார் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வெளியில் மனு அளிக்க வந்திருந்த ஒரு தொழிலாளி விஷம் குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பணியில் இருந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து தொழிலாளியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் வந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்ததில், விஷம் குடித்தவரின் பெயர் ஐயப்பன் என்பதும் கூலி வேலை செய்வதும் தெரியவந்தது.
ஐயப்பனுக்கு ராதாபுரம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருப்பதும், அதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நிலத்தை மீட்க முடியாத விரக்தியில் விஷம் குடித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்த சம்பவம் நெல்லை மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Vikatan