மறுபடியும் கட்டப்படும் 17 பேரை பலி வாங்கிய சர்ச்சைக்குரிய மேட்டுப்பாளைய சுவர்?
மறுபடியும் கட்டப்படும் 17 பேரை பலி வாங்கிய சர்ச்சைக்குரிய மேட்டுப்பாளைய சுவர்?
By : Saffron Mom
கோயம்புத்தூரில் உள்ள மேட்டுப்பாளையத்தில் கடந்த வருடம் 'சட்டவிரோதமான' மதில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகிய செய்தி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அச்சுவரை 'தீண்டாமை சுவர்' என தலித் அமைப்புகளும் சமூக அமைப்புகளும் குற்றம் சாட்டின. இந்நிலையில் இச்சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குள் மறுபடியும் அந்த சுவர் கட்டப்பட்டு வருவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கட்டி முடிக்கப் போகும் தருவாயில் இருக்கும் அச்சுவரின் உரிமையாளர் சுப்பிரமணியன் இம்முறை முனிசிபாலிட்டியிடம் அனுமதி பெற்று கட்டி வருகிறார்.
இதை உறுதி செய்த 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'க்கு முனிசிபாலிட்டி கமிஷனர் அளித்த பேட்டியில், உரிமையாளரின் சொத்து இன்னொரு பக்கத்தில் தரையில் இருந்து 14 அடி உயரத்தில் இருப்பதாகவும் ஆட்சியர் கொடுத்துள்ள அனுமதியின் படி சுவரின் உயரம் தளத்திலிருந்து 6 அடி மட்டுமே இருக்கவேண்டும் என கண்டிப்பாக நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கிறார்.
கடந்த வருடம் டிசம்பர் இரண்டாம் தேதி கடும் மழை காரணமாக சர்ச்சைக்குரிய இந்த சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உட்பட 17 தலித் மக்கள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஜவுளிக்கடை அதிபரான சுப்பிரமணியம் தனது 2 ஏக்கர் சொத்தை தலித் குடியிருப்புகளிடமிருந்து பிரிப்பதற்காக 20அடி கல்சுவர் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விபத்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூரில் பலவித போராட்டங்கள் நடந்தன. தலித் மற்றும் மற்ற சமூக நிறுவனங்கள், நில உரிமையாளர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அக்கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது.
அங்கு வசிக்கும் சேகர் என்பவர் கூறுகையில், இந்த கட்டுமானம் ஒரு மாதத்திற்கு முன்னால் ஆரம்பித்தது என்றும் நாங்கள் இன்னும் அந்த சுவரை தீண்டாமை சுவர் ஆக தான் பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.