தியேட்டர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை.!
தியேட்டர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை.!

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மீறி தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு முன்ன நாள் திரையரங்கில் வெளியாகிறது. அந்த படத்தின் டீசர்கள் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அந்த படத்திற்கு தியேட்டர்களில் டிக்கெட் பெறுவதற்கு இளைஞர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட சில தியேட்டர்களில் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. அரியலூரில் ரூ.120க்கு விற்க வேண்டிய டிக்கெட் ரூ.700க்கு விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர். பல இடங்களில் கட்டணம் உயர்த்தி விற்கப்படுவதாக புகார்கள் குவியத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளதாவது: தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து கேளிக்கை வரி குறித்து பேசிய அவர், திரையரங்குகளுக்கு கேளிக்கை வரியில் சலுகை அளிப்பது குறித்து விரைவில் முதலமைச்சர் முடிவை அறிவிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.