அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்.. இதுதான் காரணமாம்.!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்.. இதுதான் காரணமாம்.!
By : Kathir Webdesk
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை மாணவர்களுக்கு எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக கோபிச்செட்டி பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நிவர் புயல் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் கடலோர பகுதிகளுக்கு சென்று, நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட நூலகங்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கியதாகவும், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது குறித்து தற்போது அரசு பள்ளி ஆசிரியர்களும், பயிற்சி பெற்று பெறுகின்றனர்.
மேலும், அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களது சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், அவர் பேசுகையில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தொடர்பாக புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.