நாங்க போலீஸ்.. வீட்டு கதவை திறந்த சென்னை தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்.!
நாங்க போலீஸ்.. வீட்டு கதவை திறந்த சென்னை தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்.!
By : Kathir Webdesk
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் பாண்டியன் இவர் அப்பகுதியில் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 9ம் தேதி ஒரு கும்பல் நுழைந்தது. அவர்கள் தங்களை சிறப்பு போலீசார் என்று கூறியுள்ளனர். உங்களுடைய வீட்டில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே சோதனை நடத்த வந்துள்ளோம் என்றுகூறி வீட்டில் சோதனை நடத்துவது போன்று ரூ.12 லட்சம், 45 பவுன் தங்க நகைகளை நூதன முறையில் திருடி சென்றனர்.
இது தொடர்பாக கே.கே.நகர் காவல்நிலையத்தில் பாண்டியன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் போலீஸ் போல நடித்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளை கும்பலின் கார் பதிவெண் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு கிடைத்தது.
அதன் அடிப்படையில் இந்த வழக்கில் சென்னை அசோக்நகரை சேர்ந்த சிவா 25, திருவொற்றியூரை சேர்ந்த ரூபன் 36, ராஜேந்திரன் 40, சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த அஜித்குமார் 26, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த சதீஷ் 31, ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 43 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 8 செல்போன்கள், 4 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். குற்றம் நடந்து ஓரிரு வாரங்களில் நகை, பணம் உள்ளிட்டவற்றை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.