Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினுக்கு ரிப்போர்ட்! பஞ்சமி நில விவகாரத்தை கையிலெடுத்த ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணை தலைவர்!

பஞ்சமி நிலத்தை மீட்க தகுந்த சட்டம் நிறைவேற்றப்படும்

ஸ்டாலினுக்கு ரிப்போர்ட்! பஞ்சமி நில விவகாரத்தை கையிலெடுத்த ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணை தலைவர்!

MuruganandhamBy : Muruganandham

  |  6 Nov 2021 2:36 AM GMT

தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாக ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹல்தார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ததாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறைத் தலைவருடன் ஆய்வு செய்ததாக அவர் கூறினார்.

இதை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோரை சந்தித்து பேசியதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான சட்டம் விரைவில் கொண்டுவரப்பட்டு, அந்த நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என உறுதி அளித்ததாக தெரிவித்த அருண் ஹல்தார், தமிழகத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது என்றும் அதில் சுமார் 40,000 ஏக்கர் பஞ்சமி நிலத்தை வேற்றுப் பிரிவினர் அல்லது தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும் வன்கொடுமையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.8.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, 3 ஏக்கர் விவசாய நிலம் போன்றவை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல் தமிழகத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள 3,000 அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

ஏற்கனவே திமுகவிற்கு சொந்தமான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினே அதனை மீட்க சட்டம் கொண்டு வருவதாக உறுதியளித்து இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News