'புதிய கல்விக்கொள்கைதான் சிறந்தது' - மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் எல்.முருகன் உரை
'புதிய கல்விக் கொள்கை முறையில் தான் தாய்மொழியில் நம்முடைய கருத்துக்களை படிக்க முடியும், தாய் மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கை திட்டம்' என எல்.முருகன் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

By : Mohan Raj
'புதிய கல்விக் கொள்கை முறையில் தான் தாய்மொழியில் நம்முடைய கருத்துக்களை படிக்க முடியும், உலகெங்கும் முன்னேற்றும் கல்விக் கல்வியாக புதிய கல்விக் கொள்கை இருக்கும், தாய் மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கை திட்டம்' என எல்.முருகன் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினர்களாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
அப்போது பேசிய எல்.முருகன் கூறியதாவது, 'தமிழ் மொழியை உலகம் முழுவதிலும் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி, ஐ.நா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என கூறி பேச்சை தொடங்கியவர் பிரதமர் மோடி, வாரணாசியில் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கவிஞர் பாரதியாரின் பெயரில் இருக்கை அமைத்தவர் பிரதமர் மோடி, எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழ் மொழியின் பெருமையை பரப்பி வருகிறார் பிரதமர் மோடி' என்றார்.
'யோகா உலக நாடு முழுவதும் போற்றப்படுகிறது, 75 வது சுதந்திர ஆண்டில் யோகா கலையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளோம். நாம் இந்தியனாக தமிழிலேயே உலகை ஆண்டு கொண்டுள்ளோம். நூறாவது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது.
உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகளில் நமது இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர், மாவட்டம் தோறும் விளையாட்டு திடல் அமைப்பது பிரதமரின் கனவு, தாய்மொழி கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக தான் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, புதிய கல்விக் கொள்கை முறையில் தான் தாய் மொழியில் நம்முடைய கருத்துக்களை படிக்க முடியும் தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பதுதான் தற்போதைய கல்விக் கொள்கை திட்டம்' என பேசினார்.
