இந்து சமய அறநிலைத்துறை இதை செய்யவில்லை.. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொந்தளிப்பு..
By : Bharathi Latha
தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகளை அடையாளம் காண, அறநிலையத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொந்தளிப்புடன் கூறுகின்றனர். அதாவது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களின் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. அப்படி கடத்தப்படும் சிலைகள் அடையாளம் காண்பதற்கு உரிய நடவடிக்கை போலீஸ் தரப்பில் இருந்து எடுக்கப்பட்டாலும் அறநிலையத்துறை அதற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ஆனால் தற்போது வரை அந்த ஒத்துழைப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழ், 36,488 கோவில்கள் இருக்கிறது. இங்குள்ள சிலைகள், மற்றும் கலை பொருட்களை அறநிலையத்துறை படம் எடுத்து ஆவணப்படுத்தி இருக்க வேண்டும். அப்படி படம் எடுத்திருந்தால் தாருங்கள் என, பல முறை கேட்டும் பதில் இல்லை. ஆனால், 1956ல், தமிழக கோவில்களின் சிலைகளை படம் எடுத்து, புதுச்சேரியில் வைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருக்கும் சிலைகள் பற்றி அடையாளம் தெரிந்தால், புதுச்சேரியில் உள்ள படங்களுடன் தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.
அதற்கு பதிலாக, தமிழகத்திலேயே கோவில் சிலைகளை படம் எடுத்து காட்சிப்படுத்த வேண்டும். அதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்து வருவதால், சுபாஷ் சந்திர கபூர் போன்ற சர்வதேச கடத்தல்காரர்கள் எத்தனை சிலைகளை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றனர் என்பதை, உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். இப்படி தமிழுக்கு கோவில் சிலைகளை பற்றி கண்காணித்து ஆய்வு செய்ய அறநிலையத்துறை முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.
Input & Image courtesy: News