நிவர் புயல் சேதம் கணக்கெடுப்பு.. இன்று தமிழகம் வரும் மத்திய குழுவினர்.!
நிவர் புயல் சேதம் கணக்கெடுப்பு.. இன்று தமிழகம் வரும் மத்திய குழுவினர்.!
By : Kathir Webdesk
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. மீனவர்கள், விவசாயிகளுக்கு பெருத்த சேதங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், சென்னை, கடலூர், செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றன. இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில், தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2,27,317 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் சேதங்களைக் கணக்கிடுவதற்கு மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். அவர்கள் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வர். இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்த பின்னர் உரிய நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.