#KathirExclusive பிரதம மந்திரி சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் லோன் இல்லை! வங்கி மேனேஜர் அராஜகம்!
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் சிலருக்கு லோன் கொடுக்காமல் மேனேஜர் அலைக்கழிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில், சிலருக்கு லோன் கொடுக்காமல் மேனேஜர் அலைக்கழிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, வேடிக்கொட்டாய் தெருவை சேர்ந்தவர் முனியப்பசாமி 42. இவர் சென்னையில் 2டி அனிமேஷன் வேலையில் ஈடுபட்டிருந்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இதன் பின்னர் தனக்கு தெரிந்த தொழிலான சென்டரிங் வேலை செய்ய முடிவெடுத்தார். இதற்கு பணம் தேவைப்படும் என்பதால் பிரதமர் மந்திரி சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக லோனுக்கு விண்ணப்பித்திருந்தார்.
அதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொழில்மையத்தில் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து கொடுத்து லோனுக்காக காத்திருந்தார். அதன்படி அவருக்கு தருமபுரி ஆட்சியர் உத்தரவின் பேரில் லோனுக்கான ஒர்க் ஆர்டர் கிடைக்கப்பெற்றது. இந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு பாப்பாரப்பட்டியில் உள்ள இந்தியன் வங்கியில் மேனேஜரிடம் சமர்ப்பித்துள்ளார். அப்போது அதனை வாங்கி பார்த்த மேனேஜர் "உங்களுக்கு லோன் இல்லை" என்று காரணத்தை சொல்லாமல் "வெளியே போங்க" என்று கூறியுள்ளார் . இதனால் காரணம் தெரியாமல் முனியப்பசாமி தனது வீட்டிற்கு சென்று புலம்பியுளார்.
இதனிடையே இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட கதிர் குழுமம் முனியப்பசாமியிடம் பேட்டி கண்டது. அப்போது அவர் தங்களிடம் பேசியதாவது: கொரோனா காரணமாக வேலையிழந்து உள்ளேன். இதனால் சொந்தமாக தொழில் செய்ய விரும்பினேன். அதன்படி பிரதமர் மந்திரி சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக விண்ணப்பம் செய்திருந்தேன். முறைப்படி தருமபுரி தொழில்மையத்தின் மூலமாக லோனுக்கான ஆர்டர் வழங்கப்பட்டது. அதனை மேனேஜரிடம் கொண்டு சென்று காண்பித்தேன். அவர் உங்களுக்கு எல்லாம் லோன் தரமுடியாது என்று முகத்தில் அடிக்காத குறையாக திருப்பி அனுப்பிவிட்டார்.
சில நாட்கள் கழித்து தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது லோன் வாங்கிவிட்டீர்களா என கேட்டனர். இல்லை சார் இன்னும் வங்கி மேனேஜர் எந்த காரணத்தையும் சொல்லாமல் இருக்கிறார் . அதன் பின்னர் மீண்டும் வங்கிக்கு சென்று காரணத்தை கேட்க சொன்னார்கள்.
அதன்படி மீண்டும் இந்தியன் வங்கி மேனேஜரை சந்தித்தேன். தொழில் மையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, லோன் ஏன் இன்னும் கிடைக்கவில்லையா என்று கேட்டனர் என குறிப்பிட்டார். அதற்கு "கலெக்டரிடம் இருந்து போன் செய்து கொடுங்கள் நான் பேசுகிறேன்" என்று மேலாளர் கூறியுள்ளார். நான் மிகவும் நொந்து போயுள்ளேன் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்பியுள்ளேன். அவர்கள் எனக்கு லோன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
மேலும்," வங்கி மேனேஜர் ஒரு தலைபட்சமாகவே செயல்பட்டு வருகின்றார். மிகவும் அவமானப்படுத்தும் விதமாக பேசி அனுப்பி வருகின்றார் என்றார். ஏன் இப்படி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என தெரியவில்லை " என்று கண்ணீருடன் பேட்டியை முடித்தார். அதே போன்று மற்ற பிரதமர் மந்திரி சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக விண்ணப்பித்தவர்களும் இதே காரணத்தை முன்வைத்தனர். உடனடியாக மேனேஜரை நீக்க வேண்டும் அல்லது வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இதே போன்று அந்த வங்கியில் உள்ள உதவி மேலாளர் மற்றும் மற்ற ஊழியர்களும் வாடிக்கையாளர்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் நடத்துகின்றனர். என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது