மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு.!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு.!
By : Yendhizhai Krishnan
புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான மாரியம்மன் தெப்பக் குளத்தை சுற்றியுள்ள கோவிலுக்கு சொந்தமான பாதையை வணிகர்கள் சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும் இதை தடுக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கோறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அந்த இடத்தை தனிநபர்கள் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மாரியம்மன் தெப்பத் திருவிழா மதுரையில் விமரிசையாக நடப்பது வழக்கம். திருமலை நாயக்கர் காலத்தில் திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்குத் தேவையான மண்ணைத் தோண்டி எடுத்த போது ஏற்பட்ட பள்ளம் தான் மன்னரால் பெரிய குளமாக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. மதுரையின் முக்கிய அடையாளமாக இருக்கும் இந்த தெப்பக்குளத்தைச் சுற்றி நான்கு பாதைகள் இருக்கின்றன.
இதில் மேற்குப் பகுதியில் அனுப்பானடி செல்லும் வழியில் உள்ள 16 கால் மண்டபம் அருகில் சிலர் கடை வைத்து மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான பாதையை ஆக்கிரமித்து வாசல் அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்தப் பாதையில் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்ற நிலையில் இந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துமாறு மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
காமராஜர் சாலை வழியே இந்தக் கடைகளுக்கு பாதை இருந்த போதும் தெப்பக் குளத்தின் சுற்றுச் சுவரை இடித்து விட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கும் வகையில் கட்டிடப் பணிகள் மேற்கொள்வதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே வணிக நோக்கில் தெப்பக்குளம் பகுதியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் குளத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கருத்தில் கொண்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவில் தரப்பில், ஆக்கிரமிப்பில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களுக்கு காமராஜர் சாலை அருகே தனியாக பாதை உள்ளது என்றும் எனினும் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவரை இடித்து விட்டு பாதை அமைத்து கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கோவில் இடத்தை பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்கத் தயாராக இருப்பதாகவும் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பில் அரசியல் பின்புலம் உள்ளது என்று மனுதாரர் குற்றம்சாட்டிய நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முன் அனுமதியின்றி கட்டுமானத்தில் மாற்றங்கள் செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 90க்கும் மேற்பட்ட கடைகளை அறநிலையத்துறை நீக்கியது குறிப்பிடத்தக்கது.