முழுஊரடங்கு எதிரொலியால் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு.!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

By : Thangavelu
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அது போன்று செல்பவர்கள் பெரும்பாலும் பேருந்துகளையே நம்பி உள்ளனர்.
இந்நிலையில், முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு இன்றும், நாளையும் பேருந்துகள் 24 மணி நேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொரோனா காலத்தில் அதிகமான கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
