கொரோனா அச்சுறுத்தல்: ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகள்.!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதகை நகராட்சி தினசரி சந்தை, உழவர்சந்தை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
By : Thangavelu
ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த கொரோனா இல்லை என்ற சான்று பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தினமும் 8 ஆயிரத்தை கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டை போன்று இந்த முறையும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10ம் தேதி பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னரும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதே போன்று நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதகை நகராட்சி தினசரி சந்தை, உழவர்சந்தை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மார்க்கெட் பகுதி, உழவர் சந்தை பகுதிகளில் விடுமுறை நாளான இன்று பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள்.
எனவே வியாபாரிகள் கொரோனா பரவல் குறித்தும், கட்டுப்பாடுகள் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அனைத்து வியாபாரிகளும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றார்.
மேலும், சுற்றுலா நகரமான நீலகிரியில் படப்பிடிப்புக்கு அனுமதி உள்ள நிலையில் இது குறித்து பேசிய ஆட்சியர், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நபர்கள் கட்டாயமாக கொரோனா தொற்று இல்லை என்ற சான்றளித்தால் காண்பித்தால் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.