தருமபுரி: 110 நாளில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதித்த ஊராட்சி மன்றத் தலைவர்!
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிகுட்பட்ட எர்ரபையனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சிலம்பரசன் 110 நாளில் 10 ஆயிரம் மரக்கன்றை நட்டு வைத்து சாதித்துள்ளார்.
By : Thangavelu
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட எர்ரபையனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சிலம்பரசன் 110 நாளில் 10 ஆயிரம் மரக்கன்றை நட்டு வைத்து சாதித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள எர்ரபையனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக சிலம்பரசன் பதவியேற்று பல்வேறு பணிகளை சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றார். அதன்படி தனது ஊராட்சிகுட்பட்ட 41 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு நிலத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி முதன் முதலில் எர்ரபையனஅள்ளியில் அமைந்துள்ள நிலத்தில் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார். அதன்பின்னர் மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் மற்றும் துணை ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அதன்படி சுமார் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதில் மா, பழா, தென்னை, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையிலான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று 10 ஆயிரம் மரக்கன்றை நடும் பணியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான ஜி.கே.மணி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பாமக துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முருகசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பாமக தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, எர்ரபையனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சிலம்பரசன் மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். சுமார் 41 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்ளும் நன்றிகளும் என்றார். வரும் சந்ததிகளுக்கு தூய்மையான காற்று கிடைக்க வேண்டும் என்றால் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வையுங்கள் என்று பேசினார்.
Source, Image Courtesy: Kathirnews