தேவையின்றி ஆதினம் விஷயத்தில் தி.மு.க. அரசு தலையிடக்கூடாது - பேரூர் ஆதினம் அதிரடி!
By : Thangavelu
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுர ஆதினம் பல்லக்கில் சென்று பொதுமக்களுக்கு அருளாசி வழங்குவதற்கு தி.மு.க. அரசு தடை விதித்திருப்பதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், இது போன்ற ஆன்மீக விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என்று பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியானது பட்டினப்பிரவேசம் ஆகும். இதனை காண்பதற்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். அதாவது தருமபுர ஆதீனம் குரு மகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்வதற்கு தி.க., தி.மு.க., அழுத்தம் காரணமாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடைக்கு தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து கூறிய பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், நமது சமயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. பல வகையான சம்பிரதாயங்களை கொண்டிருக்கிறது. அதிலும் பெருவிழாக்கம் நடைபெறுவது வழக்கம். கோயில்களில் நடைபெறுவது போன்று ஆதீனங்கள் மற்றும் மடங்களிலும் நடைபெறுகிறது. எனவே ஆதீனத்தின் தலைவர் மக்களுக்கு அருளாசி வழங்குவதற்காக பல்லக்கில் செல்வது ஒரு பாரம்பரிய மரபு ஆகும். இது காலம், காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக அரசு நீக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் அரசு தலையிடுவது சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu