ரூ.3.50 லட்சம் கொடுங்க! உங்க வேலை முடிஞ்சிடும்: லஞ்சம் கேட்ட பொறியாளர் அதிரடி கைது!
By : Thangavelu
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் வீரகனூர் தெற்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் தெடாவூர், தம்மம்பட்டி சாலையை விரிவாக்கம் செய்வதற்கு டெண்டர் மனு அளித்திருந்தார். அதன்படி இவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
அப்போது ஏப்ரல் மாதம் பணியை தொடங்குவதற்காக ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடம் பணி ஒப்பந்தம் சான்று கேட்டுள்ளார். அதற்கு கமிஷன் தொகையாக ரூ.3.50 லட்சம் கேட்டுள்ளார். அது மட்டுமின்றி பணி முடிந்ததும் 12 சதவிகிதம் கமிஷனாக ரூ.78.53 லட்சம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜ், இது பற்றி சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து நேற்று (மே 9) ஆத்தூர் பயணியர் மாளிகையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சுந்தர்ராஜிடம் ரூ.3.50 லட்சம் பணம் வாங்கியபோது உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source, Image Courtesy: Vikatan