Kathir News
Begin typing your search above and press return to search.

எரிவாயு சிலிண்டரை வைத்து போராட்டம் நடத்திய தலித் கிறிஸ்தவர்கள் அதிரடி கைது!

எரிவாயு சிலிண்டரை வைத்து போராட்டம் நடத்திய தலித் கிறிஸ்தவர்கள் அதிரடி கைது!

ThangaveluBy : Thangavelu

  |  28 Jun 2022 9:39 AM GMT

தருமபுரி மறை மாவட்டம், அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலய பங்கிற்குட்பட்ட 380 ஆதிதிராவிடர் குடும்பங்கள் கடந்த 1979ம் ஆண்டு கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டு வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மரியோ ரோடக்சன் தலைமையில் கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருவதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறினர்.

உடனடியாக மறுக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தலித் கிறிஸ்தவ குடும்பங்கள் அரூர் பங்கை நிர்வாகிக்கும் லயோலா நிர்வாகத்தை கண்டித்து தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆலயத்தின் கதவுகளை உள்ளே பூட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமின்றி 9 பேர் எரிவாயு சிலிண்டரை உள்ளே வைத்துக்கொண்டு கோரிக்கை நிறைவேற்றவில்லை எனில் சிலிண்டரை வெடிக்க செய்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்டோர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் பூட்டு சாவி பழுது பார்க்கும் நபரை வரவழைத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று எரிவாயு சிலிண்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், போராட்டம் நடத்திய 11 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சிலிண்டரை வைத்து வெடிக்க செய்வதாக மிரட்டிய சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News