தமிழக அரசு ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் உயிரிழந்த பரிதாபம்!
By : Thangavelu
சென்னை, மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் சுமார் 259 வீடுகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. இதனிடையே கடந்த 29ம் தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதிக்க தொடங்கினர்.
இதனால் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இருந்த போதிலும் போலீசார் உதவியுடன் 150க்கும் அதிகமான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனை பார்த்த மக்கள் கதறி அழுதனர். எங்களுக்கு மாற்று இடம்கூட அளிக்காமல் இடிப்பதற்கு தங்களின் எதிர்ப்பை காட்டியிருந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் வசித்த கண்ணையா 55, என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டை இடித்து விட்டால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் என்று மனஉளைச்சலில் காணப்பட்டார். இதனிடையே நேற்று வழக்கம்போல அதிகாரிகள் வீடுகளை இடிப்பதற்கு வந்தபோது கண்ணையா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.
இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் அவர் அலறிதுடித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் முழுவதும் கண்ணையா உறவினர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Source, Image Courtesy: Daily Thanthi