கறுத்துப் போன தங்கத்தேர்: அறநிலையத் துறை அறம் வளர்க்கும் லட்சணம் இதுதானா?
தமிழகத்தில் ஏற்கனவே அறநிலையத்துறையில் பல ஊழல் நடந்துள்ளது. தற்போது திமுக அரசு கோயில் நகைகளை உருக்கி அதனை தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டத்தில் உள்ளது. இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் ஏற்கனவே அறநிலையத்துறையில் பல ஊழல் நடந்துள்ளது. தற்போது திமுக அரசு கோயில் நகைகளை உருக்கி அதனை தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டத்தில் உள்ளது. இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் மீது பல்வேறு புகார்கள் வருவதை தொடர்ந்து அங்குள்ள தங்கத்தேர் கறுத்துப்போனது பற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விசாரணை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (அக்டோபர் 5) மதுரைக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் வளாகத்தில் உள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளியைத் திறந்து வைத்தார்.
இதனிடையே அழகர்கோயில், சோலைமலை முருகன் கோயில்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். இதன் பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஸ்தபதிகளுக்கான டெண்டர் விடுவதில் தாமதமாகி வருகிறது. அதில் உள்ள பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு விரைவில் டெண்டர் விடப்படும்.
மேலும், வீரவசந்தராயர் மண்டப பணி முடிவடையாமல் கோயிலில் அடுத்த ஆண்டு குடமுழுக்க நடத்தப்படுவதில் ஆகம விதிகளில் தடை இருக்கிறதா என்பன பற்றி ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். அது மட்டுமின்றி மக்கள் நன்கொடையாக அளித்த தங்க நகைகள் கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதில் கடவுளுக்கு பயன்படுத்துவதைத் தவிர மற்ற நகைகளை உருக்கி அதனை தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு அதனை வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அதில் கிடைக்கின்ற வருவாய் வைத்து மீண்டும் வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எனக்கூறினார்.
இதனை முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலுக்கு சென்ற அமைச்சர் சேகர் பாபு அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக தங்கத்தேர் நிறுத்தும் இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது இதுதான் தங்கத்தேர் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் காண்பித்தனர். கறுப்பாக காட்சி அளித்த அந்த தேரை பார்த்து இதுதான் தங்கத்தேரா? என மிகவும் சந்தேகத்துடன் கேட்டார்.
ஏற்கனவே பொதுமக்கள் தங்கத்தேர் மிகவும் கறுத்துப்போன நிலையில் இருப்பதாக கூறிவந்தனர். இதனை செய்தியாளரும் சுட்டிக்காட்ட, தேருக்குப் பயன்படுத்திய தங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதா என்பதனையும் ஆய்வு செய்யப்பட்டு அதில் தவறு இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். ஏற்கனவே தங்கத்தேர் மட்டுமின்றி ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதுள்ளது. இதில் அதிகாரிகள் இருந்து ஊழியர்கள் வரை அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில ஏற்கனவே பல்வேறு கோயில்களில் முறைகேடான செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்துக்கள் காணிக்கையாக வழங்கும் நகைகள் பல இடங்களில் மாயமாகி வருவதும் தெரிய வருகிறது. தற்போது திமுக அரசு தங்க நகைகளை உருக்கி அதனை தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என்று கூறியுள்ளது.
இந்த தங்கக்கட்டிகளாக மாற்றும் முயற்சிகள் எத்தனை கிலோ தங்கநகைகள் மாயமாகி விடுமோ என்று இந்துக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறநிலையத்துறையில் நேர்மையாக செயல்பட வேண்டும் என்றால் முதலில் ஒவ்வொரு கோயில்களில் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர்கள் முதல் மேல் நிலை அதிகாரிகள் வரை கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் கோயில்களில் வழங்கப்படும் காணிக்கை நகைகள் உரிய முறையில் கோயில் நிர்வாகத்திற்கு முழுமையாக சென்றடையும் என்று ஒவ்வொரு இந்துக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Source, Image Courtesy: Vikatan