அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தந்தை மறைவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல.!
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமாருக்கு தந்தை மரணம் பற்றி தெரிவிக்கப்பட்டது.

By : Thangavelu
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள டி.குண்ணத்தூரில் புதியதாக கட்டப்பட்ட அம்மா கோயில் வளாகத்திலேயே, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமாருக்கு தந்தை மரணம் பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு சென்றடைந்தார். இதன் பின்னர் போஸ் உடல் டி.குண்ணத்தூர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் உடல் அம்மா கோயில் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆர்.பி.உதயகுமாரின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதே போன்று அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
