கோயில் இடத்தில் 7 ஆண்டுகளாக வாடகை பாக்கி: கிளினிக்கை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
விழுப்புரத்தில் கோயில் நிலத்தில் சுமார் ஏழு ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் வாடகை நிலுவை வைத்தவரை உடனடியாக வெளியேற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
By : Thangavelu
விழுப்புரத்தில் கோயில் நிலத்தில் சுமார் ஏழு ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் வாடகை நிலுவை வைத்தவரை உடனடியாக வெளியேற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு கோயில்கள் சென்ற பின்னர் அதற்கு சம்மந்தப்பட்ட இடங்களை தன்னிச்சையாக வாடகைக்கு எடுத்தவர்கள் கோயில் நிர்வாகத்திற்கு முறையாக வாடகை கூட செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது போன்றவர்களை தட்டிக்கேட்டால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று சட்டம் பேசி அதிகாரிகளை திருப்பி அனுப்பும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது.
அதே போன்ற சம்பவங்கள் தற்போது விழுப்புரத்திலும் நடைபெற்றுள்ளது. விழுப்புரத்தில் ஆஞ்சநேயசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் டாக்டர் தியாகராஜன் என்பவர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் அரசு அமல்படுத்திய வாடகையை சரியாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் வாடகையை முறையாக செலுத்தாக காரணத்தினால் டாக்டர் எடுத்திருந்த குத்தகையை ரத்து செய்து உடனடியாக வெளியேறுமாக கடந்த 2013ம் ஆண்டு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பித்தும் டாக்டர் வெளியேறாமல் இருந்துள்ளார். இதனிடையே வாடகை பாக்கி உயர்ந்த நிலையில், நிலுவை தொகையான 3.56 லட்சம் ரூபாயை கோயில் நிர்வாகத்திடம் டாக்டர் தியாகராஜன் வழங்கியுள்ளார். இதன் பின்னர் கடந்த 2021 செப்டம்பர் மாதம் கோயில் நிர்வாகம் டாக்டரை அப்புறப்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் தியாகராஜன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தன்னிச்சையாக வாடகையை உயர்த்தி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தற்போது இடத்தை காலிசெய்ய போலீஸ் பாதுகாப்பும் கேட்டுள்ளனர். எங்களுக்கு காலஅவகாசம் வழங்காமல் உடனடியாக வெளியேற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து சுமார் 7 ஆண்டுகளாக ஒரு ரூபாய்கூட வாடகை செலுத்தாமல் டாக்டர் தியாகராஜன் அனுபவித்து வந்துள்ளார். ஒரே ஒரு மாதம் வாடகை நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால் சொத்தின் உரிமையாளர் சட்டப்படி நடவடிக்கையை மேற்கொள்ளலாம். எனவே பல ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல் இருந்தால் குத்தகையை ரத்து செய்வதற்கும், அவர்களை வெளியேற்றுவதற்கும் கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
எனவே ஆக்கிரமிப்பாளரை சட்டப்படி அகற்றி கொள்ளலாம். இதில் குறுக்கிடுவதற்கு தேவையில்லை. எனவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், உடனடியாக வாடகை நிலுவை வசூல் செய்து டாக்டரை வெளியேற்றலாம் என்றார். இது போன்று தமிழகத்தில் பல கோயில்களின் நிலங்களை பல ஆண்டுகளாக அனுபவித்து பத்தூ பைசா வாடகையை கூட கொடுக்காமல் பணம் சம்பாதித்து வருகின்றனர். அனைத்து இடங்களையும் உயர்நீதிமன்றம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Source, Image Courtesy: Dinamalar