அழுகிப்போன சத்துணவு முட்டை ! திருப்பூரில் அமைப்பாளர் சஸ்பெண்டு !
திருப்பூர் அருகே வாவிபாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டை வினியோகித்த சத்துணவு அமைப்பாளர் இன்று (அக்டோபர் 28) சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
By : Thangavelu
திருப்பூர் அருகே வாவிபாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டை வினியோகித்த சத்துணவு அமைப்பாளர் இன்று (அக்டோபர் 28) சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சி 18வது வார்டு வாவிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி இயங்காததால், குழந்தைகளின் பெற்றோரை வரவழைத்து கடந்த 26ம் தேதி சத்துணவு அமைப்பாளர் முட்டை வினியோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டுக்கு சென்று பார்த்தபோது முட்டை அழுகிய நிலையில் இருந்ததை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை குப்பையில் வீசியுள்ளனர்.
இது தொடர்பாக சிகாமணி என்பவர் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் அழுகிய நிலையில் இருந்துள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அழுகிய முட்டைகளை வினியோகித்த சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரி மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்தார். இதனையடுத்து திருப்பூர் ஆட்சியர் நேர்முக உதவியாளர் சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரியை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதே போன்ற சம்பவம் கரூர் மாவட்டத்திலும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது இதனால் சத்துணவு முட்டைகளை வாங்குவதற்கு குழந்தைகளின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar