இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!
இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!
By : Kathir Webdesk
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நாளை காலை வரை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கரையை கடக்கும்போது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர் நிரம்பியுள்ள ஏரிகளில் திறந்து விடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்துகேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றும் பணி தொடரும். நீர் திறப்பு குறித்து உதவி பொறியாளரும், வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4027 கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21.55 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு பொதுப்பணித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.