தி.மு.க. அரசின் அவலம்: கே.கே.நகர், தி.நகரில் தேங்கி நின்ற மழை நீருடன் கழிவுநீர் கலந்ததால் துர்நாற்றம்!
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
By : Thangavelu
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னையின் முக்கிய வணிகப்பகுதியான தி.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கியுள்ளது. மேலும், கே.கே.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனை அகற்றுவதற்கு இன்னும் காலத்தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தி.நகர், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி தேங்கியுள்ள மழைநீரில் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு வீட்டில் அடைப்பட்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. இது போன்று தொடர்ந்து அப்பகுதியில் மழைநீரை அகற்றாமல் இருந்தால் டெங்கு, காலரா போன்ற கொடிய நோய்கள் பரவவும் வாய்ப்பிருக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வந்து சாக்கடை நீரில் கால் வைத்து நடப்பதற்கும் சங்கடப்படும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். திமுக அரசு அமைந்த பின்னர் சென்னை மாநகரத்தில் உள்ள சாக்கடை கால்வாய்களை முறையாக தூர்வாரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி பெரும்நோய்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.
Source, Image Courtesy: Maalaimalar