S.I வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் பயங்கரவாதியை காவலில் விசாரிக்க NIA மனு!

By : Muruganandham
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி பணியில் இருந்தபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் கொடூரமாக சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த பயங்கரவாதிகள் 2 பேரும் அருகில் உள்ள மசூதிக்கு சென்று மறைந்தனர். பின்னர் அங்கிருந்து கேரளாவிற்கு தப்பி சென்றது தெரியவந்தது. இது தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிறகு, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பதுங்கியிருந்த வில்சன் படுகொலையாளர்கள் அப்துல் சமீம், தௌபீக் ஆகிய இருவரையும் கர்நாடக போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில், எஸ்.ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட பயங்கரவாதியை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், சிராஜூதீனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக, சென்னை பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மண்ணடியை சேர்ந்த சிலநபர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
