கூரைக் கொட்டகையில் சிலைகள் வைத்து பூஜை: பாண்டிய மன்னர் கட்டிய 600 ஆண்டு பழமையான கோயிலின் நிலை இதுதான்?
By : Thangavelu
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே 600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட சின்ன ஆவுடையார் கோயில் போதுமான பராமரிப்பு இல்லாததால் முற்றிலும் சிதிலமடைந்து, சாமி சிலைகளை கூரை கொட்டகையில் வைத்து பூஜை செய்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்புராதன கோயிலை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொள்ளுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சின்ன ஆவுடையார் கோயில் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு பெயர் வரக்காணமே இங்குள்ள சிவாலயம் என்றுதான் பொதுமக்கள் சொல்கின்றனர். புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் பகுதியில் அமைந்துள்ள சிவாலயம் போன்றே பட்டுக்கோட்டை அருகே சின்ன ஆவுடையார் கோயிலில் உள்ள இக்கோயிலும் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது என்று கூறியுள்ளனர்.
இந்த இரண்டு கோயில்களிலும் மாணிக்கவாசகர் மிக நீண்ட காலம் தங்கி சிவபெருமானை வழிப்பட்டது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். அதாவது மாணிக்கவாசகர் தங்கி சிவனை வழிபட்டு வந்ததால் மாணிக்கவாசகரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டு பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கும் கோயில் சுவர்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதாக கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலகர் கே.எம்.பெருமாள் கூறியுள்ளார்.
மேலும், இக்கோயில் தமிழக இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் கோயிலை எவ்வித பராமரிப்பும் செய்யப்படாமல் விட்டதால் கோயில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் சிலை ஒரு கூரை கொட்டகையில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. உடனடியாக இக்கோயிலை பராமரிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.
பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் இக்கோயில் மூலவர் கட்டடம் கட்டுவதற்கு ரூ.4.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் சிவராமன் என்ற ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் மூலவர் கட்டடம் கட்டுவதற்கு குழி தோண்டி அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அப்போது இருந்த செயல் அலுவலருக்கும் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக பணிகள் பாதியில் நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர். உடனடியாக இந்து அறநிலையத்துறை தலையிட்டு கோயிலை புதுப்பித்து கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source, Image Courtesy: Indianexpress