ஸ்ரீபெரும்புதூர் சிவன் கோயில் இடிப்பு: டி.ஆர்.ஓ., சர்வேயர் மீது காவல் நிலையத்தில் இந்து அமைப்பினர் புகார்!
ஸ்ரீபெரும்புதூரில் சிவன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மீது காவல் நிலையத்தில் இந்து அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
By : Thangavelu
ஸ்ரீபெரும்புதூரில் சிவன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மீது காவல் நிலையத்தில் இந்து அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்குட்பட்ட கிளாய் என்ற கிராமத்தில் தபோவனம் அறக்கட்டளை சார்பாக கனக காளீஸ்வரர் திருக்கோயில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோயில் ஏரி கலங்கல் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வருவாய்த்துறையினர் புகார் அளித்தனர்.
இதனால் கோயில் நிர்வாகத்திற்கு எவ்வித முன்னறிவிப்பும் அளிக்காமல் கடந்த நவம்பர் 25ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை வைத்து இடித்து தள்ளினர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தது.
இந்நிலையில், கோயில் இடிப்பு சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர்கள் பேரணியாக ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலத்திற்கு பேரணியாக சென்றனர். அப்போது அவகாசம் கொடுக்காமல் கோயில்லை இடித்து தள்ளி மிகப்பெரிய பொருட்சேதம் ஏற்படுத்தியுள்ளதற்கு உடனடியாக இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும், கோயிலுக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை உடனடியாக காண்பிக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கோயிலை இடித்த மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் நில அளவை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamalar
Image Courtesy: Twiter