ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்கலாம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பேசும்போது, கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.

By : Thangavelu
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை செல்படுவதற்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வேளையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்தபோது, நீதிபதிகள், தமிழக அரசே ஏன் ஆக்சிஜன் உற்பத்திற்காக ஆலையை நடத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 9.15 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கலாம் என்று திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்தது.
இதனிடையே, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பேசும்போது, கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசு நோக்கம் அல்ல. ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஆலை செயல்படுவதற்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம் என கூறினார்.
மேலும், ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதை உள்ளூர் பிரதிநிதிகளை வைத்து கண்காணிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
