வெளிச்சம் போட்டு காட்டப்படாத திட்டங்கள் - தமிழகத்தில் ஊட்டசத்து குறைபாட்டை போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை!
Steps Taken by Government to Address Malnutrition
By : Muruganandham
ஊட்டச் சத்து குறைபாடு பிரச்சினைக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து, அங்கன்வாடி சேவைகள், இளம்பெண்களுக்கான திட்டம் மற்றும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) போன்ற பல திட்டங்களை ஒரு சேர இணைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்டமாக செயல்படுத்தி வருகிறது.
அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயனாளிகளாக உள்ளனர். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில் துணை ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பகுதியளவு ஊதிய இழப்பை ஈடுகட்டுவதற்கு பண ஊக்கத்தொகையை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், POSHAN அபியான் திட்டம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் கீழ் இளம்பருவ பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து நிலை முன்னேற்றம் அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மிஷன் போஷன் 2.0, என்ற ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் 2021-2022 பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் நடைமுறைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் ஊட்டச்சத்து தரம் மற்றும் பரிசோதனையை மேம்படுத்தவும், நிர்வாகத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.