''1000 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும்'' வேதாந்தா நிறுவனம்.!
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்கலாம் என தெரிவித்தனர்.
By : Thangavelu
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முழு திறனையும் பயன்படுத்தி 1,000 டன் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்வோம் என்று வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து பதிவாகிறது. இதனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.
தற்போது பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு விரைந்து கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனையடுத்து பிரதமர் நிவாரண நிதியில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒரு மனதாக அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்கலாம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஸ்டெர்லைட் ஆலையில் முழு திறனுக்கு 1000 டன் மருத்துவ உதவிக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இது குறித்து நாங்கள் ஏற்கெனவே வல்லுநர்களிடம் பேசி வருகிறோம்.
மேலும், ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு எப்படி கொண்டு செல்வது பற்றியும் பேசி வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.