ஆர்டர்லி'களை அனுப்புவது குறித்து நீதிமன்றம் தலையீட்டுக்கு பிறகு முடிவெடுத்த காவல்துறை
வீட்டு வேலைக்கு வைத்திருக்கும் ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

By : Karthiga
வீட்டு வேலைக்கு வைத்திருக்கும் ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து காவல்துறையில் 'ஆர்டர்லி, எனும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
அதாவது போலீஸ் பணிக்கு எடுக்கப்பட்ட வர்கள் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீட்டுப் பணிகளைச் செய்வதற்காக பணியமர்த்தப்படுவதாகும். தற்போது தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்லிகள் போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலை பார்த்து வருகிறார்ககள்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் 'ஆர்டர்லி' என்ற பெயரில் உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக காவலர்களை பயன்படுத்துவதாகவும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி போலீஸ் டிஜிபி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது என்றும் ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை வருகிற 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
'ஆர்டர்லிகளை' திரும்பப் பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடப்படும் எனவும் கோர்ட் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் ஆர்டர்லிகளை திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை டி.ஜி.பி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி கள் மகேஷ்குமார் அகர்வால்,சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள 'ஆர்டர்லிகளை' உடனடியாக அலுவலக பணிக்கு திரும்ப அனுப்புமாறு உத்தரவிட்டார்.
மேலும் இதை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
