சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்த மாணவி மரணத்தில் விலகாத மர்மம்: கொலைதான் என்று குற்றம்சாட்டும் தாய்!
By : Thangavelu
கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிலையில், தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அருகே கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்களுக்கும், காவல்துறைக்கும் பள்ளி நிர்வாகம் தகவலை கொடுத்துள்ளது.
இது பற்றி தகவல் கிடைத்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்ற மாணவியின் பெற்றோர்களும், உறவினர்களும் உயிரற்ற நிலையில் இருந்த சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். இது போன்று கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 6 மாணவிகள் உயிரிழந்திருப்பதாக குற்றம் சுமத்திய உறவினர்கள், மாணவியின் தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், கோட்டாட்சியர் தலைமையிலான விசாரணை நடத்தி உடனடி பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த சம்பவத்தால் கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் படிக்க வற்புறுத்தியதால் தான் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இதனை மறுத்து மாணவியின் பெற்றோர் இது பொய் குற்ச்சாட்டு, எங்களுக்கு காலையில் போன் செய்யும்போது மாணவி உயிருடன் உள்ளார் எனவும், கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வரவேண்டும் என பள்ளி சார்பாக கூறினார். அதனை தொடர்ந்து அங்கு சென்றபோது மாணவி உயிரிழந்துவிட்டார். மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள் என்று பள்ளி நிர்வாகம் கூறுகின்றனர்.
எங்க பொண்ணு தற்கொலை செய்துகொள்ள மாட்டாள் என மாணவியின் தாய் கூறியுள்ளார். எங்க பொண்ணை கொலை செய்துவிட்டு பணம், போலீஸை வைத்து எங்களை அடித்து விரட்டிவிட்டனர். எங்க பொண்ணு மாதிரி இதுவரை 6 பொண்ணுங்க உயிரிழந்துள்ளனர். என்னுடைய பொண்ணுதான் அந்த பள்ளியில் உயிரிழப்பது கடைசியாக இருக்க வேண்டும். நீதி கிடைக்காமல் சடலத்தை வாங்க மாட்டோம் என மாணவியின் பெற்றோர் கூறினர்.
Source, Image Courtesy: Vikatan