மாணவி மர்ம மரணம், போலீசுக்கு சொல்லாமலே பிரேத பரிசோதனை செய்த பள்ளி நிர்வாகம் - அடுத்த நடவடிக்கை என்ன?
கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில் காவல்துறைக்கு தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே உடலை பிரேதப்பரிசோதனை செய்து பிணவறையில் வைத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

By : Mohan Raj
கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில் காவல்துறைக்கு தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே உடலை பிரேதப்பரிசோதனை செய்து பிணவறையில் வைத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது, இந்த பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி 13ஆம் தேதி இரவு பள்ளி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி தரப்பில் கூறப்படுகிறது.
பள்ளி தாளாளர் மாணவியின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் கீழே விழுந்துவிட்டார் என கூறியுள்ளார், இதை எடுத்து அரை மணி நேரத்தில் மீண்டும் போன் செய்து மாணவி இறந்துவிட்டதாக கூறியுள்ளார். மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறாய்வு செய்து பிணவறையில் வைத்துள்ளது.
இதனை அறிந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர், தனது மகளின் உடலை பார்த்து கதறி கண்ணீர் விட்டுள்ளனர். மேலும் மகளின் உடலில் காயங்கள் இருப்பதாக குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் தனியார் பள்ளியை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்திலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளி நிர்வாகி மற்றும் பள்ளி ஆசிரியர்களை கைது வேண்டும் அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகிறது.
