முதலிடத்தில் தமிழகம் - தேசிய நீர் விருதில் சாதனை !
முதலிடத்தில் தமிழகம் - தேசிய நீர் விருதில் சாதனை !
By : Muruganandham M
இந்தியா ஒரு பரந்த நாடு, எந்த ஒன்றும் பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. நீர்ப் பாதுகாப்பை பொதுமக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மக்கள் பங்கெடுப்பினால் மட்டுமே இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று கூறி தேசிய நீர் விருதில் முதல் பரிசு பெற்ற தமிழகத்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டுத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அவர்,இப்போது ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவின் தண்ணீர் தேவை என்பது தோராயமாக 1100 பில்லியன் க்யூபெக் மீட்டராக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு, நகரமயமாதல், தொழிற்மயமாதல் , விவசாய நடவடிக்கைகள் விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக தண்ணீர் தேவை தொடர்ந்து அதிகரிப்பதால் இது 2050-ம் ஆண்டுக்குள் 1447 பில்லியன் க்யூபெக் மீட்டராக அதிகரிக்கக் கூடும்.
தண்ணீர் உபயோகம் குறைக்கப்படும் போது, தண்ணீரை நிலத்தில் இருந்து எடுப்பதற்கான பம்ப் வசதிக்கான மின்சாரம், வீடுகள், அலுவலகங்கள், விவசாயம் ஆகியவற்றுக்கு தண்ணீர் விநியோகிப்பதற்கான மின்சாரம் குறைவாக உபயோகிக்கப்படும். இதன் விளைவாக சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதும் குறையும்.
நாட்டில் திறன் வாய்ந்த தண்ணீர் மேலாண்மை மேற்கொள்வதற்காக தேசிய தண்ணீர் கொள்கை மறுசீரமைக்கப்பட்டிருப்பது, வலுவான கொள்கை கட்டமைப்பை உருவாக்கும். கங்கை தூய்மைப் படுத்துதல் உட்பட 2014-ம் ஆண்டு முதல் தண்ணீர் ஆளுகை என்பது நாட்டின் வளர்ச்சிக் கொள்கையில் முன்நிறுத்தப்பட்டுள்ளது.
விரிவான தகவல் தொடர்பு மற்றும் சொத்து உருவாக்குதல் வாயிலாக தண்ணீர் பாதுகாப்பை பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவதை ஜல் சக்தி அபியான் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு புதிய கட்டத்திலும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.
தேசிய தண்ணீர் விருதில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் வகித்த முறையே தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பாராட்டுத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது நல்ல பணிகளுக்கான பாராட்டு மட்டும் அல்ல. பல்வேறு பங்கெடுப்பாளர்களை ஊக்குவித்து நாட்டின் தண்ணீர் வளத்தை திறனுடன் நிர்வகிப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
கிராம பஞ்சாயத்துக்கான நீர் பாதுகாப்பு பிரிவின் கீழ், தூத்துக்குடி முதல் இடத்தைப் பிடித்தது. சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் முதல் இடத்தை மதுரை மாநகராட்சி பெற்றுள்ளது.ஆறுகளை மீட்டெடுத்தல் பிரிவில் இந்திய அளவில் இரண்டு மாவட்டங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இரண்டு மாவட்டங்களுமே தமிழகத்தில் தான் உள்ளன. முதலிடம் வேலூர்.
இரண்டாமிடம் கரூர் மாவட்டம்.அதே போல், நீர் சேமிப்பு பிரிவில் பெரம்பலூர் 2வது இடத்திற்கும், நீர் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மதுரையும் தேர்வாகி உள்ளது.