ஓசூர் ஜுஜுவாடியில் தீவிர கண்காணிப்பு.. தமிழகத்திற்கு நுழைய இபாஸ் கட்டாயம்.!
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழைபவர்களுக்கு இபாஸ் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

By : Thangavelu
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நுழைவதற்கு கட்டாயம் இபாஸ் வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழைபவர்களுக்கு இபாஸ் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து, இன்று அதிகாலை முதல் வருவாய் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து வரும் இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்படுகிறது. இபாஸ் இருந்தால் மட்டும் தமிழகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படுகின்றனர்.
இபாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். அதே போன்று சரக்கு வாகனங்களுக்கு தடை இல்லை, வழக்கம் போல் இயங்கி வருகிறது.
