பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை: போக்குவரத்துத் துறை தகவல்.!
அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை என்று தமிழக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.

By : Thangavelu
நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே போன்று தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இதனிடையே அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை என்று தமிழக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இது பற்றி அரசு போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது: "இரவு நேரத்தில் அரசு பேருந்துகள் ஓடாததால் 12 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் பகலில் சுமார் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று கட்டாயமில்லை" எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் சுற்றறிக்கையில் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், போக்குவரத்து செயலாளர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
