கர்நாடகாவில் முழுஊரடங்கு: தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்.!
தொற்று பரவலை கட்டுப்படுத்தும்விதமாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா 2 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டார்.

By : Thangavelu
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 27ம் தேதி முதல் இரவு 9 மணி முதல் மே 10ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் பேருந்து சேவைகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் இல்லாததால் தமிழக பயணிகள் பல ஆயிரம் பேர் பெங்களூருவில் தவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும்விதமாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா 2 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து கர்நாடகாவில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளதால் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகாவிற்கு செல்லும் பயணிகள் ஓசூர் எல்லையில் இருந்து நடந்து செல்கின்றனர். அதே போன்று பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
