பள்ளிகள் தொடர்ந்து செயல்படும்.. கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு.!
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனிடையே தொற்று குறைந்த காரணத்தினால் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
By : Thangavelu
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனிடையே தொற்று குறைந்த காரணத்தினால் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதே நேரத்தில் 12ம் வகுப்பு மாணவர்களை தவிற மற்ற அனைவரும் தேர்ச்சி அடைந்துவிட்டதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஒரு சில வாரங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை கருதி, 12ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் தடையின்றி நடைபெற்று வருகின்றது.
அதே போன்று 9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது பற்றி பள்ளிக்கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை. இது பற்றிய வதந்திகளை மாணவர்கள், பெற்றோர் நம்ப வேண்டாம். பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.