தமிழகத்தில் இன்று 8000ஐ நெருங்கிய கொரோனா தொற்று.!
இந்த முறையும் ஊரடங்கை பிறப்பிக்கும் சூழ்நிலை உருவாகும் என்றே தோன்றுகிறது. கிட்டத்தட்ட 10 ஆயிரத்தை நெருங்கும் சூழல் உருவாகியுள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் 2வது அலை கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாகவே காணப்படுகிறது. முதலில் 500 என்று ஆரம்பிக்கப்பட்ட தொற்று தற்போது 8 ஆயிரத்தை தொட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதன் பின்னர் முழு ஊரடங்கு போடப்பட்டதால் தொற்று பரவல் குறைக்கப்பட்டது. அதே போன்று இந்த முறையும் ஊரடங்கை பிறப்பிக்கும் சூழ்நிலை உருவாகும் என்றே தோன்றுகிறது. கிட்டத்தட்ட 10 ஆயிரத்தை நெருங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட சுமார் 7,819 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 54 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 54,315 ஆக உள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 4,733 பேர் ஆண்கள், 3,086 பெண்கள். இன்று 25 பேர் உயிரிழந்துள்ளார். 12 பேர் தனியார் மருத்துவமனையிலும், 13 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார். மொத்த உயிரிழப்பு 12,970 ஆக உயர்ந்துள்ளது.