தமிழகத்தில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று.. மினி ஊரடங்கு போடப்படுமா?
சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11,318 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,195 பேர் ஆண்கள், 776 பேர் பெண்கள் ஆவார்கள்.
By : Thangavelu
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதே போன்று இந்தியாவில் தொற்று தீவிரம் அடைந்துள்ளது. ஒரு புறம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மறுபுறம் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,971 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8லட்சத்து 75ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11,318 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,195 பேர் ஆண்கள், 776 பேர் பெண்கள் ஆவார்கள்.
அதே போன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் தனியார் மருத்துவமனையிலும், 5 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் மீண்டும் தமிழகத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொற்று பாதிக்கப்படும் நகரங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.