குடைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை.. பழனி அருகே விநோதம்.!
மதுவாங்க வருபவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் குடை பிடித்தபடி வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் அனைவரும் குடையுடன் காலை முதலே காத்திருந்தனர்.

By : Thangavelu
திண்டுக்கல் மாவட்டம், பழனி எல்லையில் உள்ள டாக்மாக் கடையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கின் மதுபிரியர்கள் குடையுடன் காத்திருந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முழுஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று முதல் புதிய தளர்வுகளை அரசு அறிவித்தது. அதில் டாஸ்மாக் கடைகள் திறக்கவும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் முன்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் இருந்து வருகின்றனர். இதனால் மீண்டும் மூன்றாம் அலை வேகமாக உருவெடுக்கும் என்று பலரும் அரசை எச்சரித்து வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கடையில் ஏராளமானோர்கள் குவிந்தனர். அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மதுவாங்க வருபவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் குடை பிடித்தபடி வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் அனைவரும் குடையுடன் காலை முதலே காத்திருந்தனர்.
