தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தாமிரபரணியில் குவிந்த மக்கள்.!
தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தாமிரபரணியில் குவிந்த மக்கள்.!
By : Kathir Webdesk
தை அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர்கள் பாபநாசத்தில் குவிந்துள்ளனர். நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். தை மற்றும் ஆடி அமாவாசைகளில் மறைந்த தங்களுடைய மூதாதையர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வது இந்து மக்களின் ஐதீகமாக உள்ளது.
இன்று தை அம்மாவாசை என்பதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாமிரபரணி நதியில் ஏராளமானவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். இதன் பின்னர் தாமிரபரணி நதியில் புனித நீராடி அங்குள்ள பாபநாச சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
அதே போன்று தமிழகம் முழுவதும் இன்று தை அமாவாசையை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் கோயில் குளங்களில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.